கொலை செய்து புதைக்கப்பட்ட திமுக தொழிற்சங்க செயலாளர் குமாரின் உடலை தோண்டி எடுத்து பிரதே பரிசோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொன்று புதைக்கப்பட்ட சென்னையை சேர்ந்த திமுக தொழிற்சங்க செயலாளர் குமாரின் உடலை தோண்டி எடுத்து பிரதே பரிசோதனை நடத்தப்பட்டது.
 
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் திமுக தொழிற்சங்க செயலாளர் குமார்.  அவர் முன்னாள் திமுக எம்பி குப்புசாமியிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மகள் வீட்டுக்குச் சென்ற குமார் காணாமல் திடீரென மாயமானதாக, அவரது குடும்பத்தினர் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தாம்பரம் காவல்துறை உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

மேலும் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு உத்தண்டியில் உறவினருக்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை ரவி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக குமார் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரவியைப் பிடித்து நடத்திய விசாரணையில் குமாரை கடத்தி கொலை செய்து உடலை செஞ்சி அருகே உள்ள மேல் ஓலக்கூரில் புதைத்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ரவி, செந்தில்குமார், விஜய் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், செஞ்சி வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து குமாரின் உடலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். இதனையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
  

Night
Day