எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி "ஹை கோர்ட்" மகாராஜாவை சென்னையில் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை கடத்தி, கொலை செய்ய கூலி படைக் கும்பல் ஒன்று திட்டமிட்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கடந்த வாரம் அற்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்தக் கூலிப்படை கும்பலிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தின் பின்னணியில் ரவுடி ஐகோர்ட் மகாராஜா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நெல்லை விரைந்த தனிப்படை போலீசார் ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் நிறுத்தி வைத்திருப்பதாக மகாராஜா தெரிவித்தநிலையில், போலீசார் அவரை அங்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, ரவுடி ஐகோர்ட் மகாராஜா இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட போலீசார், ரவுடியை வலது காலில் சுட்டுப் பிடித்தனர். இதில் காயமடைந்த மகாராஜா ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.