எழுத்தின் அளவு: அ+ அ- அ
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பதிவிட்ட வன்மமான கருத்துகளால் ஏற்பட்ட கலவரம் காரணமாக ஒரு கிராமமே பதற்றத்தில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட கட்சி தலைவர் குறித்த பாடலுக்கு, அவரது கட்சியினர் ஆட்டம் ஆடுவது போல் வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். அதில் ஒரு சிலர் ஜாதி பெயரை குறிப்பிட்டு வன்மமான வார்த்தைகளால் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பதிவிற்கு கீழே, கல்பகனூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற 17 வயது இளைஞர் மற்றொரு சமுதாயத்தைக் குறித்து வன்மமாகவும் தவறான கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.
மேலும், அதனை தனது whatsapp பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அதனைப் பார்த்த சம்மந்தப்பட்ட சமுதாயத்தினர் தங்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் தலைமையில் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில், ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.
இதனயடுத்து இருதரப்பினரிடையே மோதல் உருவாகாமல் இருக்க காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் தலைமையில் 3 காவலர்கள் கல்பகனூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினர் முன்னிலையிலேயே இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி செங்கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், வாகனங்கள், வீட்டில் உள்ள பொருட்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது.
இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்த நிலையில், வன்முறை காரணமாக, பாதுகாப்பு பணிக்காக வந்த வீரகனூர் தலைமை காவலர் முருகவேல் என்பவருக்கு மண்டை உடைந்தது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அதிக அளவிளான போலீசார் கல்பகனூருக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், பாதுகாப்பு கருதி மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைய செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் சரக டிஐஜி உமா, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கவும், நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும், மோதல் சம்பந்தமாக போலீசார் 10 பேரை கைது செய்தனர். அது மட்டுமின்றி 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இதனால் கல்பகனூர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.
தங்கள் சமூகத்தை சேர்ந்த தலைவரை தாங்கி பிடிக்க, மாற்று சமூகத்தை சேர்ந்த தலைவர்களை தாக்கி பேசுவதும், வன்மமான பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. இரண்டு பேரின் தவறான நடவடிக்கையால், மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறி பாதுகாப்புக்கு வந்த தலைமை காவலரின் மண்டை உடையமளவுக்கு வன்மம் அதிகரித்துள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.