எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை நாங்குநேரியில் தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னதுரை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமுதாய மாணவர்கள் சிலர், வீடு புகுந்து சின்னதுரை மற்றும் அவரது சகோதரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தற்போது பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், 5 பேர் கொண்ட மர்மகும்பல் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதில், படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே பட்டியலின மாணவர் சின்னத்துரை மீது நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக பாளையங்கோட்டை காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். சின்னத்துரையை தாக்கியவர்களை தேடி வருவதாக கூறிய சுரேஷ், சின்னத்துரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.