பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு - உதவி ஆணையர் நேரில் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் எட்டாம் வகுப்பு மாணவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் வழக்கம் போல் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மாணவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் சக மாணவர் ஒருவரை தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் அச்சத்தில் அலறியுள்ளனர். இதனை கேட்டு ஓடிவந்த அப்பள்ளியின் ஆசிரியை, இதனை தடுக்க முயன்றபோது, அவரையும் மாணவர் வெட்டியுள்ளார்.  இதில் படுகாயமடைந்த மாணவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிவாள் வெட்டில் காயமடைந்த ஆசிரியை பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சென்ற பாளையங்கோட்டை போலீசார் அரிவாளால் வெட்டிய மாணவரை  பிடித்து, சாதி ரீதியான பிரச்னையா? ஏதேனும் பொருட்கள் வாங்குவதில் பிரச்னையா? விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற காவல் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தகப் பையில் மாணவன் அரிவாளை மறைத்து எடுத்து வந்ததாகவும், வெட்டுப்பட்ட மாணவருக்கு சிறிய அளவிலேயே காயங்கள் உள்ளதாகவும், மேலும் இதுகுறித்து முதற்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இதுகுறித்து பேசியுள்ள பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை நிஜாமுதீன், மாணவர்கள் இருவரும் பென்சில் பிரச்னை தொடர்பாக கடந்த 2 மாதமாக பேசாமல் இருந்து வந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று பள்ளி வகுப்பறையில் திடீரென தனது மகனை சக மாணவர் அரிவாளால் வெட்டியதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போது தாக்குதல் நடத்திய மாணவரிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Night
Day