எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த சம்பவத்தில், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓமந்தூரார் மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக முகமது கௌஸ் என்பவர், இருசக்கர வாகனத்தில் 20 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங், முகமது கௌஸை வழிமறித்துள்ளார். தொடர்ந்து தனக்குத் தெரிந்த வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோரை வரவழைத்துள்ளார். பின்னர் முகமது கௌஸை காரில் ஏற்றிச் சென்ற அவர்கள், முகமது கௌஸை மிரட்டி அவர் வைத்திருந்த 20 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு, செல்லும் வழியில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங்குக்கு 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு மீதி 15 லட்சம் ரூபாயை வருமானவரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் பங்கிட்டு கொண்டுள்ளனர். இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், தன்னை வழிமறித்து போலீஸ் எனக்கூறி 20 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றதாக முகமது கௌஸ் புகாரளித்தார். இதையடுத்து கூட்டு வழிப்பறி என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4பேரை கைது செய்தனர்.