எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு 2 பெண் குழந்தைகளுடன் வந்த தாய், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தண்ணீரை ஊற்றி அவர்களை காப்பாற்றிய நிலையில், எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
நெல்லை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வழக்கம் போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். பின்னர் இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், இளம்பெண் மற்றும் அவரது குழந்தைகளை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்த முத்துலெட்சுமி என்பதும், இவரது கணவர் முத்துக்குமார் முறுக்கு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. முத்துலட்சுமி கம்ப்யூட்டர் ஆன்லைன் சென்டர் நடத்தி இலவச பட்டா, வீட்டு மனை வாங்கி தருவதாக ஏராளமானவர்களிடம் பண மோசடி செய்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், தன்னிடம் விசாரணை நடத்தக்கூடும் என்பதை அறிந்து அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இதனை மறுத்த முத்துலெட்சுமி, போலீசார் வேண்டுமென்றே தன் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்வதாகவும், இதற்கு தனது கணவரும் அவரது சகோதரும் உடந்தையாக இருப்பதாகவும், கண்ணீர் மல்க கூறினார். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் வேதனையுடன் முத்துலெட்சுமி தெரிவித்தார்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் வந்த தாய் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.