எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுச்சேரியில் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் துரத்தி துரத்தி தாக்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மணிகண்டன் 1-ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவிக்கு, 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அளித்த தகவலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மணிகண்டனை துரத்தி துரத்தி தாக்கினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பள்ளியில் நுழைந்து, பொருட்களை அடித்து நொறுக்கி தும்சம் செய்து சூறையாடினர். மேலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்தில் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான செல்வம், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், டிஐஜி சத்திய சுந்தரம் உள்ளிட்டோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிய செய்யப்பட்டு, பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் இன்று நடைபெறுவதாக இருந்த செய்முறை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்