2 விவசாயிகள் வெட்டிப் படுகொலை - தொழில் பிரச்சனையால் மைத்துனரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆண்டிப்பட்டி அருகே இரண்டு விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொழில் பிரச்சனையால் மைத்துனரே கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
  
தேனி மாவட்டம் தர்மராஜபுரத்தை சேர்ந்த கருப்பையா, தங்கம்மாள்புரத்தை சேர்ந்த மணி ஆகிய இரண்டு விவசாயிகளும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி கோவில்பாறை மலையடிவாரத்தில் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். முதலில் வனவிலங்கு தாக்கி இருவரும் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், கருப்பையாவின் உடல் கிடந்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் கிடந்த செல்போனை ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து செல்போன் யாருடையது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில் செல்போன் உரிமையாளரான கடமலைக்குண்டு கணேசன் என்பவரும், கடமலைக்குண்டுவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இருவரையும் போலிசார் காவலில் எடுத்து விசாரித்த போது கருப்பையா என்பவர் கருப்பசாமியின் சகோதரியின் கணவர் என்பதும், இருவரும் இடையே அடகு கடை நடத்தியதில் முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. இதனால் தனது நண்பர் கணேசன் உதவியுடன் கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது பக்கத்து தோட்டத்தில் கருப்பையாவின் நண்பரான மணி என்ற விவசாயி இருந்ததால் அவரையும் தீர்த்துகட்டியுள்ளனர். இதனையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Night
Day