தர்பூசணியில் ரசாயனம் கலப்பு... மக்களே உஷார்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்யப்பட்ட 6 டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கும் நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

வெயில் காலம் துவங்கி விட்ட நிலையில் மக்கள் குளிர்பானங்கள் பழங்கள் ஆகியவற்றை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் சாலையோரங்களில் தர்பூசணி, கரும்பு ஜூஸ், மோர் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது..

வெயில் நேரங்களில் பயணம் செய்பவர்கள் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள் என்பதால் சாலையோரங்களில் தர்பூசணி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மொத்தமாக தர்பூசணி பழங்களை வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைக்கு முன்னரே கடும் வெயில் காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை தணிக்கவும், நீர்ச்சத்துக்காவும் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் நுங்கு, குளிர்பானங்கள். பழச்சாறுகள், தர்பூசணிகளை பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

குறிப்பாக ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் சாலையோரங்களில் எங்கு பார்த்தாலும் தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூரை சேர்ந்த சிறு வியாபாரிகள் வெளியூர்களிலிருந்து தர்பூசணி பழங்களை  வாங்கி வந்து விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். இந்த பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஆனால், ஒரு சில இடங்களில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி  பழத்தின் உட்புறத்தில் சிவப்பு நிறமாக காணப்படுவதால், ரசாயன ஊசி செலுத்திய பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

அந்தவகையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் இது போன்ற ரசாயனம் செலுத்திய தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று 9 இடங்களில் ஆய்வு செய்தனர்
அதில் 6 இடங்களில் ரசாயனம் செலுத்தப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து 6 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை அழித்தனர். 

இந்நிலையில், தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதால் அதனை சாப்பிடும் போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்றும், புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம் என்று கூறும் அதிகாரிகள், கடைகளில் வாங்கும் போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day