யூடியூப் பார்த்து டயட்... இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப் வீடியோ பார்த்து டயட் பின்பற்றிய 18 வயது இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஃபேஷனுக்காக டயட் பின்பற்றுவதால் ஏற்படும் பாதிப்பும், அதனை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதையும் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

90ஸ் கிட்ஸ் காலத்தில் டயட் என்ற வார்த்தையை கேட்டால், அப்டினா என்னப்பா என கேட்கும் அளவிலேயே இருந்தது. இந்த 2கே கிட்ஸ் காலம் வந்தது முதல் தொலைபேசி நம் வாழ்வில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறதோ,அதற்கு நிகராக டயட் என்பதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குண்டா இருக்கீங்களா டயட் இருங்க.. ஒல்லியா இருக்கீங்களா டயட் இருங்க... அழகா ஆகணுமா டயட் இருங்க... என எதற்கெடுத்தாலும் டயட்... டயட்... டயட்... தான்...

டயட் இருந்தால் நாம் அழகாகவும், மற்றவர்கள் மத்தியில் பந்தாவாக கூறிக்கொள்ளலாம் என்பதற்காகவுமே ஒரு சிலர் டயட் இருக்கின்றனர். அப்படி டயட் பற்றி எதுவும் அறியாமல் அதனை மேற்கொண்டதால் 18 வயது மாணவிக்கு நேர்ந்த துயரம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது..

கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் 18 வயதாகும் ஸ்ரீநந்தா. உடல் எடை அதிகரித்ததால், அதனை குறைக்க யூடியூப் வீடியோக்களை பார்த்து டயட்டில் இருந்துள்ளார் ஸ்ரீநந்தா. உடல் எடையை குறைக்க தேடி தேடி வீடியோக்களை பார்த்த ஸ்ரீநந்தா, அவற்றில் கூறுவது போன்ற உணவு பழக்கத்தை மாற்றியும் உள்ளார். 

இவ்வாறு உணவு பழக்கத்தை மேற்கொண்டு வந்த ஸ்ரீநந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமான ஸ்ரீநந்தாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அவரின் குடும்பத்தினர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ஸ்ரீநந்தா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். டயட் மேற்கொண்ட பதினெட்டு வயதே ஆன இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது குறித்து தலைமை உணவியல் நிபுணர் லேகா ஸ்ரீதரன் கூறுகையில், யூடியூபில் வீடியோ பார்த்து டயட் மேற்கொள்வது சரியான முறை இல்லை என்றும், அவற்றில் கூறும் குறிப்புகள் ஆதாரம் அற்றவை என்றும் தெரிவித்தார்.

3 மாதம் உணவு பழக்கத்தை மாற்றி உடல் எடையை குறைக்க முயலும் ஒரு சிலர், கண்ணாடியில் தங்களின் உடலை பார்க்கும்போது இன்னும் நாம் குண்டாக தான் இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையால் தொடர்ந்து கடுமையான முறையில் டயட் மேற்கொள்கின்றனர். இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்கள் அநோரேக்சியா பீப்பிள் (Anorexia people) என்ற மனநோய் உடையவர்கள்.

ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர்கள் என அனுபவம் வாய்ந்தோர்களிடம் ஆலோசித்து டயட் பின்பற்றுவதே சிறந்த வழி  என மருத்துவர் லேகா ஸ்ரீதரன் அறிவுறுத்தினார். 

Night
Day